×

கண்ணனும் துர்வாசரும்

கண்ணனும் துர்வாசரும்காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-சென்ற இதழ் தொடர்ச்சி…‘‘அகம்பாவம் பிடித்த அரச குமாரர்களே! உடனே இங்கிருந்து போய் விடுங்கள்! அக்கிரமம் செய்யாதீர்கள். இப்படிப்பட்ட கொடூரமான வார்த்தைகளை என் முன்னால், உங்களைத்தவிர வேறுயாரும் பேச மாட்டார்கள்.முட்டாள்களே!உங்கள் எல்லோரையும் என் தவ சக்தியால் சாம்பலாம ஆக்கி விடுவேன். ஆனால் நான் அதைச் செய்யக் கூடாது. உங்கள் அகங்காரத்தை அடக்கி அழிக்க, சங்கு – சக்ர – கதாதரன் தயாராக இருக்கிறான். அதிகமாகச் சொல்லி, காலத்தை வீணாக்க விரும்பவில்லை’’ என்று துர்வாசர் அந்தத் தீயவர்களிடமிருந்து விலக எண்ணி, அங்கிருந்து செல்ல முயன்றார்.ஆனால், ஹம்சனும் டிம்பகனும் துர்வாசரை, மேலே போகவிடாமல் தடுத்து அவரை இம்சித்தார்கள். அதைப் பார்த்த மற்ற ரிஷிகள் எல்லோரும் துர்வாசருக்கே இந்தக்கதி என்றால், நமக்கு என்னவாகுமோ?’’ என்று பயந்து நடுங்கி மூலைக்கு ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். அரச குமாரர்களின் அக்கிரமங்களைக் கண்ட அவர்களின் நண்பன் ஜனார்தனன், அவர்களுக்குப் பலவிதமாகவும் புத்திமதி சொன்னான். ஆனால், அரசகுமாரர்களோ, அவன் வார்த்தைகளை லட்சியம் செய்யவே இல்லை; அட்டூழியத்தைத் தொடர்ந்தார்கள்.துர்வாசர் அப்போதும் கோபப்படவில்லை; ‘‘அரச குலத்தைக் கெடுக்க வந்தவர்களே! உடனே போய்விடுங்கள்! உங்களை அழிக்க எனக்கு வெகுநேரமாகாது. இப்போது நான் விரதம் பூண்டிருக்கிறேன். உங்களையும் உங்கள் கர்வத்தையும் அழிக்கக் கண்ணன் தயாராக இருக்கிறான். போய்விடுங்கள்! போய்விடுங்கள்’’ என்று எச்சரித்து விட்டு, ஜனார்தனனைப் பார்த்து, ‘‘குழந்தாய்! உனக்கு மங்கலம் உண்டாகட்டும்! ஸ்ரீகிருஷ்ணனின் அருள் உனக்கு சீக்கிரமே கிடைக்கும். உன் தகப்பனாரிடம் போய், இங்கு நடந்ததை எல்லாம் விவரமாகச் சொல்!” என்றார்.அதைக்கேட்ட அரச குமாரர்கள் தீவினைக் கயிற்றால் கட்டப்பட்டவர்களைப்போல, அங்கிருந்த மகரிஷிகளின் காஷாய ஆடை, கமண்டலங்கள், தண்டங்கள் ஆகியவற்றையெல்லாம் அழித்து, ஆசிரமங்களையும் நாசம் செய்து விட்டுத் திரும்பினார்கள். ஜனார்தனனும் மிகுந்த வருத்தத்தோடு அவர்களைப் பின் தொடர்ந்தான். துர்வாசர், அரசகுமாரர்கள் செய்த அக்கிரமங்களைப் பொறுக்காமல் அஞ்சி ஓடிய ரிஷிகளையெல்லாம் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து, ‘‘இனி நாம் இங்கே இருந்து நிம்மதியாகத் தவம் செய்ய முடியாது. நாம் எல்லோரும் துவார காபுரிக்குப் போவோம். அங்கே ஸ்ரீமன் நாராயணன் கண்ணனாக அவதாரம் செய்திருக்கிறான். அவனைச் சரணடைந்து நடந்தவைகளை எல்லாம் சொல்லி, உடைந்துபோன பொருட்களை எல்லாம் காட்டி, காப்பாற்றுமாறு வேண்டுவோம். அவன் நம்மைக் காப்பாற்றுவான். புறப்படுங்கள்!” என்றார்.எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.ஐயாயிரம் ரிஷிகள் பின்தொடர, துர்வாசர் துவாரகையை அடைந்தார்; போனதும் எல்லோரும் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, கண்ணனைத் தரிசிக்கச் சென்றார்கள்.அவர்கள் போன வேளையில் கண்ணன் தன் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் காரணமாகச் சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்த ரிஷிகள், விளையாட்டு முடிந்தபின் உள்ளே நுழைந்தார்கள். ஏராளமான ரிஷிகளுடன் வந்திருந்த துர்வாசரைக் கண்டதும் வசுதேவர் முதலானோர் எல்லாம்‘‘துர்வாச முனிவர் இவ்வளவு பரபரப்போடு கோபம் கொண்டவர்போல வந்திருக்கிறாரே! கைகளில் உடைந்துபோன தண்ட கமண்டலங்களை வேறு கொண்டு வந்திருக்கிறார். உள்ளத்தில் ஜொலிக்கும் கோபம், இவர் பார்வையிலேயே தெரிகிறதே! உலகத்தையே அழிக்கும் சக்தி படைத்த இவருக்குப்போய், என்ன ஆபத்து வந்தது? கண்ணன் என்ன சொல்லப் போகிறானோ?’’ என்று பயந்து நடுங்கிக் கைகளை கூப்பிக் கொண்டு துர்வாசரிடம், ‘‘இதோ! இந்த ஆசனத்தில் எழுந்தருள வேண்டும்’’ என வேண்டினார்கள்.நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், துர்வாசரின் முன்னால்போய், ‘‘ஸ்வாமி! இதோ ஆசனம்! எழுந்தருளுங்கள் இதில்! நிம்மதியாக உட்காருங்கள்! தங்களின் வேலைக்காரனாக, அடியேன் காத்திருக்கிறேன். கட்டளை இடுங்கள்!’’ என வேண்டினார்.  கண்ணனைத் தரிசித்த சந்தோஷத்தில், துர்வாசர் ஆசனத்தில் உட்கார்ந்தார். மற்ற மஹரிஷிகளும் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தார்கள். அதன்பிறகு துர்வாசரை முறைப்படி உபசரித்த  கண்ணன், ‘‘உத்தமமான முனிவரே! தாங்கள் இங்கு எழுந்தருளிய காரணம் என்ன? அடியேன் செய்த பாக்கிய விசேஷமா? அல்லது வேறெதாவது மகத்தான காரணம் உள்ளதா? நீங்கள் எல்லோருமே சன்யாசிகள்; பாவம் இல்லாதவர்கள். ஏதாவது ஒரு பொருளில் ஆசை இருந்தால், அதை அடைவதற்காக அடுத்தவர்களைக் கேட்க வேண்டும். தங்களுக்கோ, அப்படி எதுவுமே இருக்கக் காரணமே இல்லை. எவ்வளவுதான் யோசனை செய்து பார்த்தாலும், தங்களின் வருகைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் ஏதோ காரணம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அடியேனிடம் அக்காரணத்தைச் சொல்லலாம் என்றால் தயவுசெய்து சொல்லி அருளுங்கள்!” என்று வேண்டினார். கண்ணனது வார்த்தைகளைக் கேட்ட துர்வாசர், ‘‘கோவிந்தா! உனக்குத் தெரியாதது என்று ஒன்று உண்டா? ஏன் இப்படிச் சொல்கிறாய் என்பது எனக்குத் தெரியும். என்னை ஏமாற்றுகிறாயே கண்ணா! நான் வெகுநாளைய மனிதன்; உன்னுடைய பூர்வ விருத்தாந்தங்களை எல்லாம் நன்றாக அறிந்தவன்; எங்களையெல்லாம் காப்பதற்காக அல்லவா, நீ இப்படி மாயா மானிட வடிவம் கொண்டு வந்திருக்கிறாய்! மற்றவர்களைப்போல, நான் முழு மூடனல்ல; உன்னை உள்ளபடியே அறிந்தவன் நான். நாங்கள் வந்த காரணம் உனக்குத் தெரியாதா? எங்களுடைய கஷ்டம் உனக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் நீ கேட்பதால் சொல்கிறேன். ஹம்சன் – டிம்பகன் என்ற அரச குமாரர்கள் இருவர், சிவபெருமானிடம் இருந்து வரம்பெற்ற கர்வத்தால், எங்களையெல்லாம் இழிவுபடுத்தி விட்டார்கள். இல்லறமே உயர்ந்தது; துறவறம் கூடவே கூடாது என்று எங்களை வாதுக்கு இழுத்து, எங்கள் காவி ஆடைகளையெல்லாம் கிழித்தெறிந்து விட்டார்கள்; கமண்டலங்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதோபார்! அவர்கள் உடைத்தவைகளை எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி, கொண்டு வந்தவைகளையெல்லாம் காட்டினார். ‘‘கண்ணா! நீ அவதாரம் செய்திருந்தும் எங்களுக்கு இந்தத் துயரம் வரலாமா? உன்னை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் ஏது? அவர்கள் இருவரையும் உயிருடன் விட்டால், உலகத்தையே அழித்து விடுவார்கள். சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரம், அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அவர்களை ஒடுக்க வேறு யாராலும் முடியாது. நீ ஒருவன் மட்டுமே அவர்களை அழிக்கக் கூடியவன். அதிகமாகச் சொல்வானேன்! இந்த உலகைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு” என்று நடந்தவற்றைச் சொன்னார், துர்வாசர்.துர்வாசரின் வார்த்தைகளைக் கேட்ட கண்ணன், ‘‘துறவிகளில் உயர்ந்தவரே! எல்லாம் என் தவறுதான். பொறுத்தருளுங்கள்! சிவபெருமானிடம் இருந்து பெற்ற வர பலத்தால், அக்கிரமங்கள் செய்யும் அந்த ஹம்ச – டிம்பகர்களை நான் வதம் செய்வேன். அவர்களுக்கு உதவியாக வருபவர்களையும் வதைப்பேன். முன்புபோல் உங்களுக்கு அமைதியையும் அளிப்பேன். இது சத்தியம்! கோபத்தையும் வருத்தத்தையும் விட்டுவிடுங்கள்! உங்களைக் காப்பது என் கடமை. நீங்களல்லவா எனக்குத் தெய்வம்! பயம் இல்லாமல்போய் முன்பைப்போலவே தவம் செய்யுங்கள்!’’ என்றார். கண்ணன் சொன்ன வார்த்தைகளால் களிப்படைந்தார் துர்வாசர்; ‘‘உலக நன்மைக்காக வந்த உத்தம ஜகன்னாதா! உனக்கு மங்கலம் உண்டாகட்டும்! உன்னால் முடியாதது ஒன்று உண்டா? தெரிந்தோ-தெரியாமலோ நாங்கள் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என வேண்டினார்.கண்ணனோ, ‘‘யதி சிரேஷ்டரே! தாங்களல்லவா பொறுத்தருள வேண்டும்! எல்லோராலும் எப்போதும் வணங்கத் தக்கவர்கள் – துறவிகள். பொறுமைக் கடலான அவர்களுக்குப் பொறுமையே பலம். நீங்கள் எல்லோரும் என்னால் பூஜிக்கத் தகுந்தவர்கள். இன்று தங்கி அடியேன் இல்லத்தில் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அனுக்கிரகித்துச் செல்ல வேண்டும்” என்று வேண்டினார்.  துர்வாசர் அதை ஏற்றுக்கொண்டார். ரிஷிகள் எல்லோருக்கும் கண்ணன் பட்டு ஆடைகளைச் சமர்ப்பித்தார். அவர்களும் மிகுந்த மகிழ்வோடு உண்டு களித்துவிட்டுத் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள். துர்வாசர் மட்டும் அங்கேயே இருந்து, நாரதருடன் தத்துவ விசாரம் செய்து வந்தார்.கண்ணன், கர்வம் பிடித்த அரசகுமாரர்களை அழிப்பேன் என்று சொன்னாரே தவிர, அதற்கு உண்டான நடவடிக்கைகள் எதிலும் இறங்க வில்லை. பிறகு எப்படிதான் துர்வாசர் பட்ட கொடுமைகள் தீரும்? (தொடரும்)பி.என். பரசுராமன்

The post கண்ணனும் துர்வாசரும் appeared first on Dinakaran.

Tags : Kannan ,Badasar ,Kane ,DurvasarumKapiam ,Agambawam ,
× RELATED ‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால்...